×

வாக்குகளை பெறவே பிரதமர் மோடி தமிழில் பேசுகிறார்: மதுரை பொதுக்கூட்டத்தில் தயாநிதி மாறன் எம்.பி பேச்சு

மதுரை: வாக்குகளை பெறவே பிரதமர் மோடி தமிழில் பேசுகிறார் என மதுரையில் நடந்த நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டத்தில் தயாநிதி மாறன் எம்.பி. பேசினார். மதுரை மாநகர் மாவட்ட ஆரப்பாளையம் 1ம் பகுதி திமுக சார்பில் எல்லோருக்கும் எல்லாம் திராவிட மாடல் நாயகரின் 71வது பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர், தயாநிதி மாறன் எம்.பி பேசியதாவது:

மதுரை மாவட்டத்திற்கு மு.க.ஸ்டாலின் திட்டங்களை அள்ளி தந்துள்ளார். கலைஞர் நூற்றாண்டு நூலகம். கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் கட்டி முடிக்கப்பட்டது. கீழடி அருங்காட்சியகத்தை உருவாக்கினார். மீனாட்சியம்மன் கோயிலில் ரூ.25 கோடியில் திருப்பணிகள் அரசின் சார்பில் நடந்துள்ளது. தீவிபத்தால் சேதமடைந்த வீரவசந்தராயர் மண்டபம் ரூ.18 கோடியில் சீரமைக்கப்படுகிறது. மதுரைக்கும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தொழில் புத்தாக்க மையம் அமைக்க ரூ.24 கோடி, திருப்பரங்குன்றம் மற்றும் திருநீர்மலையில் ரோப்கார் வசதி ஏற்படுத்த ரூ.26 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் சார்பில் மதுரையில் ஒலிம்பிக் வீரர்களை தேர்வு செய்திடும் மையம் அமைக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்காக மக்கள் திசை திருப்பப்படுகின்றனர். நான் பாராளுமன்றத்தில் பேசினேன். மோடி ஒவ்வொரு முறை வரும்போது தமிழ் மீது பெரும் காதல் கொள்கிறார். ஏதாவது ஒரு திருக்குறளை தெளிவாக பேசுகிறார். எப்படி இப்படி பேசுகிறார்? அவருக்கு தமிழ் தெரியுமா என கேட்கின்றனர். நன்றாக பாருங்கள். பேசும்போது அவருக்கு அருகில் 2 ஸ்டாண்ட் இருக்கும். அதை டெலிபிராம்ப்டர் என்போம். செய்தி வாசிக்கும்போது பயன்படுத்துவர். பேசுபவர் கண்ணுக்கு மட்டுமே தெரியும். தமிழ் வார்த்தைகளை இந்தியில் வைத்து பேசுவார். தமிழ்நாடு வந்தால் எனக்கு பிடித்த ஊர். தமிழ் தான் சிறந்த மொழி என்பார். அப்படியே கேரளா போனால் மலையாளம் தான் என்பார். பொய் பேசியே நம்மை கவர ஒவ்வொரு ஊருக்கும் போய், அவர்களது மொழியில் பேசி நமது வாக்கை திருடுவதற்காகத் தான் அப்படி பேசுகிறார். வாக்குகளை பெறவே பிரதமர் மோடி தமிழில் பேசுகிறார்.

தமிழ் மொழியை, வள்ளுவரை மதிக்கிறேன் என்கிறீர்களே? இந்தியாவில் முதல் செம்மொழி தமிழ் தான். அதை தந்தவர் தலைவர் கலைஞர் தான். தமிழுக்காக இதுவரை எவ்வளவு செலவு செய்துள்ளீர்கள்? யாரும் பேசாத சமஸ்கிருதத்திற்கு ரூ.1,500 கோடி செலவிடுகிறார்கள். பல கோடி பேர் பேசும் தமிழுக்கு ஒன்றும் இல்லை. ஏனென்றால் தமிழ்நாட்டு மக்களை உங்களுக்கு பிடிக்காது.இங்கே நாம் அனைத்து மதத்தையும் மதிக்கிறோம். நமக்கு எம்மதமும் சம்மதம். அதைதான் பெரியார், அண்ணா, கலைஞர், தமிழ்நாடு முதல்வர் ஆகியோர் சொல்லித் தந்துள்ளனர். இந்து, இஸ்லாம், கிறிஸ்தவர் என்று யாரையும் நாம் பிரித்துபார்ப்பதில்லை.

ஆனால், நீங்கள் வெறுப்பு அரசியல், செய்கிறீர்கள். பாஜவின் வெறுப்பு அரசியலை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இந்தியை திணிக்கிறீர்கள். நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. மோடி பேச்சை கேட்டு இந்தி மட்டும் படித்தால் போதும் என நினைத்து வட இந்தியர்கள் இந்தியை மட்டும் படித்துவிட்டு, ஆங்கிலத்தை படிக்காமல்விட்டனர். இன்று உலகின் தலைசிறந்த கம்பெனிகளில் தமிழர்கள் தான் இருக்கிறார்கள். காரணம் நாம் தமிழையும், ஆங்கிலத்தையும் கைவிடாமல் இருந்தோம்.

நீங்கள் இந்தி மட்டும் படிப்பதால் வேலைவாய்ப்பில்லை. வளர்ச்சி இல்லை. தென்னகத்தை நோக்கி வேலைக்காக வருகின்றனர். 10 ஆண்டுகளாக பாஜ ஆட்சியில் உள்ளது. என்ன சாதனை செய்தீர்கள்? வந்ததும் ஒவ்வொருவர் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக கூறினார். 15 லட்சம் எங்கே வந்தது? பணமதிப்பிழப்பு செய்வது குறித்து யாருடனும் கலந்தாலோசிக்கவில்லை. அப்போது கொண்டு வந்த ரூ.2 ஆயிரம் நோட்டு இப்போது யாரிடம் உள்ளது. எவ்வளவு கருப்பு பணத்தை வெளியில் கொண்டு வந்தீர்கள்? பொதுத் துறை நிறுவனங்களை எல்லாம் விற்றுவிட்டனர்.இவ்வாறு பேசினார்.

முன்னதாக மாவட்ட அவைத்தலைவர் ஒச்சுபாலு வரவேற்றார். பகுதி செயலாளர் எஸ்.எஸ்.மாறன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்எல்ஏ, உயர்மட்ட செயல்திட்டக்குழு உறுப்பினர் பொன்.முத்துராமலிங்கம், மாநில தணிக்கைக்குழு உறுப்பினர் வேலுச்சாமி, முன்னாள் மேயர் குழந்தைவேலு, மாநகர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் முத்துக்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் மாமன்றக்குழு தலைவர் ஜெயராம், மேயர் இந்திராணி பொன்வசந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

‘வந்தார்கள்.. பார்த்தார்கள்…’ தயாநிதி மாறன் எம்.பி மேலும் பேசுகையில், ‘‘காஸ் விலையை கேட்டாலே பெண்களுக்கு கண்ணீர் வருகிறது. பெட்ரோல் டீசல் விலை 100ஐ தாண்டிவிட்டது. விலையை குறைப்பேன் என கேரண்டி தரலாமே. எதற்கெடுத்தாலும் ஜிஎஸ்டி. அப்பளம், பாக்கிற்கும் கூட ஜிஎஸ்டி. சென்னை பெருவெள்ளம், தென்மாவட்டத்தில் எதிர்பார்க்காத பெருவெள்ளம். ஆனால், பிரதமர் வந்து பார்க்கவில்லையே. முதல்வர் ரூ.6 ஆயிரம் கொடுத்தார். ஒன்றியத்தில் இருந்து வந்தார்கள், பார்த்தார்கள், மிக்சர் சாப்பிட்டனர். சென்றார்கள் அவ்வளவு தான். யார் தயவும் இன்றி முதல்வர் கொடுத்தார். தமிழ்நாட்டு மக்கள் மீது மோடிக்கு அக்கறை இல்லை. இப்போ வர்றாரே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரை பார்த்திருக்கலாமே. ஒன்னும் செய்யவில்லை. தமிழ்நாட்டு மக்கள் அயோத்திக்கு சென்று சுவாமி கும்பிடுவர். ஆனால், பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள்’’ என்றார்.

The post வாக்குகளை பெறவே பிரதமர் மோடி தமிழில் பேசுகிறார்: மதுரை பொதுக்கூட்டத்தில் தயாநிதி மாறன் எம்.பி பேச்சு appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Dayanidhi Maran ,Madurai ,Modi ,Dayanithi Maran ,Madurai City District Arapalayam 1st ,Constituency ,Dravidian ,DMK ,Dinakaran ,
× RELATED எல்லோரையும் போல நானும் எனது ஆட்டத்தை...